வெள்ளி, நவம்பர் 27, 2009

கேளிக்கை..!


இருக்கின்ற நாழியெல்லாம் இன்பமாய் களிப்பதும்
இரவுடன் பகலும் சுகமாய் துயில்வதும்

கணமெல்லாம் கேளிக்கையில் திளைப்பதும்
திரைகூத்தாடியை சிரஸ்தார் என்பதும்

மதி மயக்கும் மது அருந்துவதும்
மனம் பசப்பும் மாது பின்செல்வதும்

உரிமைகளையும் உடைமைகளையும் இழக்குந்தருணம்- நம்
உறவுகளையும் கடமைகளையும் மறக்குந்தருணம்

மதிகெட்டு மனிதன் செய்யும் தருணம் - ஆங்குநல்
மதியுள்ளோர் அதை மாற்றிட வரணும்..!

திங்கள், நவம்பர் 23, 2009

இவன் மானிடன்..!

மானிடனாய்ப் பிறந்துவிட்டோம் - நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்

ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் - அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்

மதசாதியால் பிரிந்துவிட்டோம் - மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்

பணத்தை மனதிலே எத்திவிட்டோம் - குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்

கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் - பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்

தள்ளாத வயது சென்றிடுவோம் - அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்

மானங்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் - இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்

வெள்ளி, நவம்பர் 20, 2009

அழகு..!


பார் அழகு
பார்க்கும் விழியழகு

இருளழகு - அதிலே
ஒரு துளி ஒளியழகு

மலையழகு - ஆங்கே
பொழியும் மழையழகு

சிலையழகு - சிற்பியின்
சீர்மிகு கலையழகு

ஆணழகு - அவன்
கொண்ட ஆண்மை அழகு

பெண்மையழகு - அவள்
ஈனும் தாய்மையழகு

மொழியழகு - செந்தமிழாயின்
நம் சிந்தையழகு

உண்மையழகு - பொதுநல
பொய்யும் அழகு

பிறப்பழகு - பிறர்கெனின்
இறப்பும் அழகு

திருமணமழகு - இருமனம்
ஒன்றானால் இல்லறமழகு

துன்பம் நீக்கும் துறவறமழகு
மானம் காக்கும் மறமழகு

மகுடம் கொண்ட சிரமழகு
வாரி வழங்கும் கரமழகு

மனமழகு - எனின்,
யாவும் பேரழகு..!

செவ்வாய், நவம்பர் 03, 2009

துருவங்கள்..!


இரவும் பகலும்
நீரும் நெருப்பும்

வடக்கும் தெற்கும்
வானும் மண்ணும்

நன்மையும் தீமையும்
நாமமும் பட்டையும்

மதமும் மனிதமும்
சாதியும் சமத்துவமும்

எதிர் துருவங்களே - எப்போதும்
இவைகள் இணைவதில்லை