ஞாயிறு, நவம்பர் 23, 2014

அவசர கவிதைகள் ...!




வந்து மறைந்த
திருமறைகள்
சில நூறு 

அனைத்தும் 
போற்றுவதில்
தாயும் ஒரு கூறு.









இருள் சேர் நேரங்கள் 
தன் நிழலையும் கொல்லும் 
முற்றிலும் இருண்டாலும் 
வாழ்வில் பொருள் சேர்க்க 
உடன் நட்பு நில்லும்.. 









தீண்டாமை இல்லாமை இயலாமை 
அறுக்கும் ஒரு கருவி கல்வி

அறியாமை புரியாமை வெல்லாமை 
விலக்கும் ஒரு விளக்கு கல்வி 

வரலாறு புரளாமல், புரண்டாலும் 
வடிக்கட்டும் வடிகட்டி கல்வி 

பாதாளம் வீழ்ந்தவனை மலை 
ஏற்றும் படிக்கட்டு கல்வி 

பலதேசம் பரதேசம் போனாலும் 
பார்போற்ற வைப்பதுவும் கல்வி 

பொருளீட்ட புகழீட்ட உயிர்காக்க 
தேசவலுகூட்ட செய்வதுவும் கல்வி 

கசடர கற்பதே கல்வி - வாழ்வில் 
கசடர செய்வதே கல்வி... 

(குறிப்பு - தோழர் தமிழ் செல்வனுக்காக அவசரமாக எழுதியவைகள் )

புதன், அக்டோபர் 29, 2014

என்னை அன்பு செய்பவளுக்கு..



அகராதி தோற்றுப்போனது
விளங்கும்படி விளக்க 
அழகு இதுவென்று - உன் 
ஒற்றை புன்னகையை 
காணாத கண்களுக்கு...
உன் தாயும் வள்ளுவனே
உன் ஐந்தடிக்குள் - என்
அறம் பொருள் இன்பத்தை
பொதிந்ததினால்

தமிழ்ச் சுவை 
குன்றி போகுதே 
அவளின் கல்லச் 
சிரிப்பின் முன்
செல்லக் குறும்புகளை 
மெல்ல ரசிக்கும் 
உள்ள மின்னுமிருப்பதை
உன்னால் உணர்கிறேன்
தமிழாழி ஆழம் 
மூழ்கிப் பார்கிறேன் 
உனையெழுத வார்த்தை
முத்தின்றித் தோற்கிறேன்
என்னில் புகுந்து
உன்னில் சிறைவைக்கிறாய்
நம்மில் நாமே
நம்மை தொலைக்கிறோம்
உன்னை எண்ணுகையில்
உள்ளம் துடிக்குதே
உன்னை மறந்தால்
உள்ளம் துடிதுடிக்குதே


துணுக்குகள்..



இறத்தல் 
இழப்பில்லை 
இரத்தல் 
இழுக்கு..
அன்பு
உலகாழும் 
அதுவன்றி 
உலகுவீழும்..!

புன்னகையும் 
மௌனமும் 
கேடயம்...
நம் பிழை
பிறர் பொறுக்கத் 
தேடும் மனம், 
பிறர் பிழைபொறுக்க 
மறப்பது விந்தை..

"பொறுமை" இழந்தால்
விளைவுகள் சொல்லுகிறது
அதன் விலைமதிப்பை...

காசு


காசு - நீ 
அற்புத ஆசான், 
அனைவரின் அசல் 
வர்ணம் காட்டும் 
கண்ணாடி

பொய் உரைத்தல்
திறமை என்பாய்,
உண்மை உதிர்ந்தால்
உளறல் என்பாய்..

கேடென்றே விளங்கியும் 
விழ செய்வாய், 
சுற்றமும் நட்பும் 
விலக செய்வாய்,

காசு - நீ 
அழகிய சதிகாரி,
இருந்தும் உறுதி 
கொண்ட உள்ளமுன் 
தோற்று போவாய்.

புதன், ஆகஸ்ட் 06, 2014

காஸா...!


அழக்கூட நேரமின்றி 
சிதறிய உடலை 
கழுவி முடித்து 
அடுத்தநொடி அணுகுண்டை 
அன்ணாந்து பார்க்கும் 
அவனுக்காக அழ 
இஸ்லாமியானாய் அல்ல 
நாம் மனிதனாய் 
இருத்தல் போதாதா..? 

இந்தியனாய் தமிழனாய்
இருப்பது பற்று!
இஸ்லாமியானாய் 
இருப்பது வெறி! - இது 
உலக அகராதிகள் 
வரையறுத்த வரையறை! 
இதுயென்ன நீதி.?