சனி, ஜூலை 06, 2024

தெருவிளக்கு

சாதிமத பேதமில்லா
பெருவிளக்கு சூரியன்!
சாதிமத பேதமில்லா
சிறுசூரியன் தெருவிளக்கு!

நாம் விழித்தால் உறங்கும்,
நாம் உறங்க விழிக்கும்,
ஊர்க்காவலன் தெருவிளக்கு!

எம்வீட்டு எரிவாயு
அடுப்பெரிய காரணம்
எந்தையின் கல்விக்கு
அருள்செய்த தெருவிளக்கு!

அந்த ஒரு தெருவிளக்கு
பொசுக்கியது ஒரு மனிதனின்
அறியாமை அல்ல! - ஒரு
சந்ததியின் அறியாமை இருளை!

தெருவுக்குத்தெரு உயர்ந்து நிற்கும்
தெருவிளக்கு, தரம் உயர்த்திய
சந்ததிகளின் எண்ணிக்கை என்ன?
எண்ணிமுடிக்க எவரால் முடியும்?

எதிரி கூட்டம் நடுவே கம்பீரமாய்
நடைபோடும் நாயகன் போல,
இரவெல்லாம் இருள்!
இடைஇடையே தெருவிளக்கு!


செவ்வாய், மே 28, 2024

வானவில்

மழைத் திருவிழாவின்
தோரணமே வானவில்லே!
தூரிகையின்றி இயற்கை
வரைந்த ஓவியமே!
நீ எங்கு தொடங்கி
எங்கு முடிகிறாய்?

கதிரவன் உன்
நண்பனா? எதிரியா?
அவன் கதிர்களால்
நீ எழுகிறாய்!
ஆனால் அவன்
எதிரே நிற்கிறாய்!

குளிரும் மழையும்
சுடும் கதிரும்
சேரும் பொழுது
வரும் வானவில் - நீ
சொல்லும் நியதி,
இன்பதுன்பம் இணைவதே 
அழகிய வாழ்வு!

மழை பொழிய 
காத்திருக்கும் நாங்கள்
மழை ஓயவும்
காத்து இருக்கிறோம்
உனக்காக! 

புதன், நவம்பர் 22, 2023

மழைச் சாரலே

நீ இப்படியே இருந்துவிடக் கூடாதா?

அறைக்குள் செயற்கை குளுமையில்
எதிர்ப்பு ஆற்றல் குறையாமல்
எல்லோரும் இன்புற்றிருக்க நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

நித்தமும் சாப்பாட்டு பொட்டலமாய்
உடலை கரிக்கும் உள்ளத்தை அரிக்கும்
வெயிலில் வெந்து ஊருக்கே
உணவு கொண்டு சேர்க்கும்
சகோதரனின் உள்ளம் குளிர நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

தூரமாய் மலைப்பகுக்கு ஓடுகிறோம்
தேகம் குளிர உன்னை தேடுகிறோம் நீ
இப்படியே இருந்துவிடக் கூடாதா?

எல்லா உயிர்க்கும் உயிராய் தூவும்
மழைச் சாரலே நீ எப்போதும் எம்மோடு
இப்படியே இருந்து விடக்கூடாதா?